தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை தெரிவிக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி, அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழக முதலமைச்சர் இன்று (23/08/2022) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் விவரம் பின்வருமாறு, "சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொரு வரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம். மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையிலான அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்றிடத் திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.
இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.