
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு எனக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். அதே சமயம் சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூக வலைத்தளப் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார். அதோடு, அவர்களை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட மற்றும் தொகுதி வாரியான நிர்வாகிகளின் கூட்டம் வரும் ஜூன் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள பனையூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 10 மற்றும் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.