காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 2018 ஏப்ரல் 4 ஆம் தேதி திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திருநாவுக்கரசர், ஜவாஹிருல்லா, தொல்.திருமாவளவன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, காதர்மொய்தீன், திருநாவுக்கரசு, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஏழு பேருக்கு டிசம்பா் 26ஆம் தேதி நீதிமன்றத்திஸ் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்தரிக்கை நகல்களை நீதிமன்றம் வழங்கியது. இதே போல் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், ஜவாஹிருல்லா சார்பாக அவர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.