Skip to main content

 கூலித்தொழிலாளிக்கு இன்ஸ்பெக்டர் பகிரங்க மிரட்டல்!! வீடியோ வைரல் ஆனதால் காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பு

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

 

சேலத்தில் வழித்தட பிரச்னையில் புகார் கொடுக்க வந்த தொழிலாளி மீது, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பொய் வழக்கு போட்டு விடுவேன் என்று காவல் ஆய்வாளர் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

xx


சேலம் சாமிநாதபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தேவராஜன் (36). கூலித்தொழிலாளி. இவர் திங்கள் கிழமை (ஜூன் 17) காலை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு கொடுப்பதற்காக குடும்பத்துடன் வந்தார். திடீரென்று அவர் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் குடுவைகளை பிடுங்கி வீசி எறிந்தனர்.


அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தேவராஜனுக்கும் அவருடைய வீடு அருகே உள்ள ஒரு குடும்பத்தினருக்கும் வழித்தடம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருவதும், இது தொடர்பாக பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருந்தபோது, பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேல், அவர் மீது பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டியதும் தெரிய வந்தது.


மேலும் அவர், ஆய்வாளர் தன்னை மிரட்டியதாக செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஒரு காணொலிப்பதிவை காவல்துறையினரிடம் காண்பித்தார். 


அந்த காணொலி பதிவில், 'நாங்க நினைச்சா என்ன வேணும்னாலும் பண்ண முடியும். பேனை பெருச்சாளியாக்குவோம், யானையா கூட ஆக்குவோம். யானைய பேனாகவும் ஆக்குவோம். ஒரு சின்னப்புள்ளைய நீ கெடுத்துட்டதா உன் மேலேயே என்னால போக்ஸோ சட்டத்தின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்ய முடியும். இது கொலை வழக்கை விட கொடுமையானது புரிஞ்சுக்கோ,' என்று தேவராஜனை கடுமையாக மிரட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.


பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர், ஆய்வாளர் சாலைராம் சக்திவேலை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர், 'புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் இப்படி மிரட்டி பேச வேண்டிய தேவையில்லை. இன்னொருமுறை இதுபோன்ற புகார் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்,' என்று அவரை எச்சரித்து அனுப்பினார்.


எனினும், கூலித்தொழிலாளி மீது பொய் வழக்கு போட்டு விடுவதாக ஆய்வாளர் மிரட்டிய காணொலி அனைத்து சமூக ஊடகங்களிலும் பெரிய அளவில் பரவியதால், காவல்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்