ஹைட்ரோ-கார்பன் திட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் புதிதாக மூன்று ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வேதாந்தா நிறுவனத்துக்கு இரண்டும், ஒ.என்.ஜி.சி-க்கு ஒன்றுமாக அந்த திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையைத் துவக்கி தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் கேட்டை ஏற்படுத்தியுள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வழங்குவதன் மூலம் டெல்டா மாவட்டங்களை நாசமாக்க மத்திய அரசு வழிவகுத்துள்ளது. ஏற்கனவே, நெடுவாசல் போராட்டத்தின் காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் டெல்டா மாவட்ட மக்களை குறிவைத்து மத்திய அரசு செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் தமிழக அரசு வாய்மூடிக்கிடப்பது வேதனையளிக்கிறது.
டெல்டா மாவட்டங்களை குறிவைத்து துவக்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மக்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் கம்பெனிகளுக்கு லாபம் ஈட்டி தருவதற்காகத் தமிழக மக்களின் வாழ்க்கையோடு விளையாடக் கூடாது என சுட்டிக்காட்டுகிறோம் எனக்கூறியுள்ளார்.