உபேர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்களை போன்று இரு சக்கர டாக்ஸியை அறிமுகப்படுத்தியது ரேபிடோ நிறுவனம். அதில் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட இரு இடங்களுக்கு இடையில் பயணிக்கும் போது, பின் இருக்கைக்கு பயணியை வாடகைக்கு அழைத்துச் செல்லும் வகையில், ரேபிடோ எனும் செயலியையும், இணைய தளத்தையும் தெலங்கானாவைச் சேர்ந்த ரோப்பன் என்ற தனியார் நிறுவனம் துவங்கியது. இந்த செயலிக்கும், இணையதளத்திற்கும் தடை விதிக்கக் கோரி கால் டாக்சி ஓட்டுனர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ரேபிடோ செயலிக்கும், இணைய தளத்திற்கும் தடை விதித்து ஜூலை 18 ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் செயலிக்கு தடை விதித்த தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ செயலி நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் செயலியை நீக்கும்படி கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு உதவி ஆணையர் அனுப்பிய கடிதத்திற்கும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ரேபிடோ செயலிக்கும், இணைய தளத்திற்கும் தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.