தமிழகத்தில் 44 நாட்களுக்குப் பிறகு சென்னையைத் தவிர பிறமாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மற்ற மாநிலங்களுக்கு மதுபிரியர்கள் அதிக அளவில் செல்வதைத் தவிர்க்க தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் மற்றும் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு மதுபிரியர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறன. 50 வயதான மதுபிரியர்களுக்கு மதியம் 01.00 மணிவரை டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 01.00 மணிமுதல் 03.00 மணிவரையும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 03.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரையும் மதுபான விற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ஒருவருக்கு மூன்று நாளைக்கு ஒரு முறை ஒரு ஃபுல் அல்லது ஒரு பீர் பாட்டில் மட்டுமே டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஒரு ஃபுல்லை இரண்டு ஆப் (அல்லது) நான்கு குவாட்டர் பாட்டிலாக மதுபான பிரியர்கள் டாஸ்மாக்கில் பெற்றுக்கொள்ளலாம் டாஸ்மாக் நிறுவனம் கூறியுள்ளது. டாஸ்மாக்கில் மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி ஆதார் எண்ணுடன் ரசீது வழங்கப்படுகிறது.
இதனிடையே டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ரூபாய் 10 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நடுத்தர, பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூபாய் 20 அதிகரிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் கடைகள் முன்பு குவிந்துள்ளனர்.