1988- ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்தது. வேலூர் மாவட்டம் தான். அந்த காலக்கட்டத்தில் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் என புதியதாக 3 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வந்தது. திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட கோரிக்கை என்பது போராட்ட வடிவில் இருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று 1989-ல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, திருவண்ணாமலை மாவட்டம் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கினார். திருப்பத்தூர் மாவட்ட கோரிக்கை மட்டும் அப்படியே இருந்தது.
அன்று முதல் இன்று வரை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் பகுதி மக்கள் தனி மாவட்டம் கேட்டு போராடி வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதம், கடையடைப்பு, போராட்டமெல்லாம் நடத்தினார்கள். ஆனால், ஏனோ ஆட்சியில் இருந்தவர்கள் அதனை செய்யவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும், திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகளில் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி தருகிறார்கள். வெற்றி பெற்ற பின் அதுப்பற்றி கண்டுக்கொள்வதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி மாவட்டம் என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு கள்ளக்குறிச்சி என்கிற மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த 2019-ல் மட்டும் 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 40 வருடங்களாக போராடி வரும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாகவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக்கேட்டு திருப்பத்தூர் பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள் ஜூலை 26- ந்தேதியான இன்று போராட்டம் நடத்தினர். தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்கிற பழைய கோரிக்கை தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.