வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் சில பொறுப்பாளர்களை வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நீக்கிவிட்டு, புதியதாக பொறுப்பாளர்களை நியமனம் செய்தார். இரண்டு தரப்புக்குமான கோஷ்டி மோதலால் இப்படி நடந்துள்ளது என்பதை இரண்டு தினங்களுக்கு முன்பு நமது நக்கீரன் இணைய தள செய்தியில் குறிப்பிட்டுயிருந்தோம்.
இந்த பிரச்சனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றது காங்கிரஸ் கட்சியின் நீக்கப்பட்ட தரப்பு. இந்நிலையில் நவம்பர் 11ந்தேதியான இன்று காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜோதி, சில நிர்வாகிகளை அவர்கள் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து விடுவித்து, அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளதாக நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. ஜோதி அவர்களின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு கட்சி விதிகளுக்கு புறம்பானதாகும் மற்றும் செல்லத்தக்கது அல்ல.
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோதி, அவர்களால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள். அதேபோல், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக இதன்மூலம் அறிவிக்கின்றேன். இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் ஒப்புதல் இல்லாமல், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் இதர துறைகளைச் சார்ந்த நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், மாவட்ட கமிட்டிக்கு கீழ் உள்ள அமைப்புகளுக்கு மாநில தலைமையின் ஒப்புதல் இல்லாமல் புதிதாக எந்த பொறுப்புக்கும் யாரையும் நியமனமும் செய்ய முடியாது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.