வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, "வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும். ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேட்டைப் பயன்படுத்தக் கூடாது. கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளைத் திறக்கக் கூடாது. பள்ளிகளில் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது. வெளியாட்கள் பள்ளிக்குள் வருவதை அனுமதிக்கக் கூடாது. மாணவர்களின் மனநலன், உடல்நலனை சோதிக்க மருத்துவர் அல்லது செவிலியர் முழு நேரமும் பள்ளியில் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகளில் நடமாடும் சுகாதார முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும். பள்ளிப் பேருந்துகள், வேன்கள், விடுதிகளிலும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்கலாம்" என்று வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல மாதங்களுக்கு பிறகு 9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.