இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் பூசாரிகள், பட்டாச்சார்யார்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் கரோனா கால நிவாரண உதவியாக நான்காயிரம் ரூபாய், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நடைப்பெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக, வழிக்காட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, 10- ம் வகுப்பு, ப்ளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள், பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது. எனவே, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு, அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது எளிதானது. விரைவாக ப்ளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்படும். கரோனா தாக்கம், தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும், உளவியல் ரீதியாக குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மூன்றாவது அலை வரும் என கூறுகின்றனர்.
எனவே, ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டு நெறிமுறைகள், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் ஆகியவற்றை பெற்று, முதலமைச்சரிடம் ஆலோசனை செய்த பின்பு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.