வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி, தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நாளை (09/10/2020) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்டோபர் 10- ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குப்பநத்தம் (கடலூர்)- 14 செ.மீ., காட்டுமன்னார்கோவில்- 11 செ.மீ., விருத்தாசலம்- 9 செ.மீ., ஆலங்குடி (புதுக்கோட்டை) -8 செ.மீ., கந்தர்வகோட்டை- 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரைத் திரும்ப வேண்டும் இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.