புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சையது அபுல்ஹாசன். இவரது மகன் ஷேக் அப்துல்லா. 2017 - 2018 ஆண்டில் சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றவர் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு வந்து ஆன்லைன் வகுப்பில் படிப்பைத் தொடர்ந்துள்ளார். தற்போது சீனாவில் மருத்துவப் பயிற்சி உள்ளதாக பல்கலைக்கழகம் அழைத்திருந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்பு சீனா சென்ற மாணவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தற்போது சீனாவில் உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதுபற்றி பெற்றோர்கள் கேட்க, மாணவருக்கு கொரோனா இ்ல்லை. கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மருத்துவச் செலவுக்காக ரூ. 6.40 லட்சம் பணம் கேட்டுள்ளனர். தன் மகன் உயிரைக் காப்பாற்றுவதற்காக தெரிந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரிடம் கடன் வாங்கி பல்கலைக்கழக நிர்வாகம் கேட்ட ரூ. 6.40 லட்சத்தை அனுப்பியுள்ளனர். மேலும், தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மருத்துவ மாணவரின் பெற்றோருக்கு இடியாய் இறங்கும் செய்தியாக அவர்களது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் வந்தது. இந்தத் தகவலையடுத்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். தங்கள் மகன் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோரும், மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மாணவர் உடலை புதுக்கோட்டை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படலாம் என்கின்றனர்.