கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முதல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று (09/05/2021) காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில், நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, "அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள வசதிகளையும், அளிக்கப்படும் உணவு, சிகிச்சைகளையும் கண்காணிக்க வேண்டும்.
ஆக்சிஜன் வீணாகாமல் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும்.
சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையைக் கண்காணித்து, கள்ளச்சந்தையில் விற்பனை ஆகாமல் தடுக்க வேண்டும்.
தடுப்பூசிப் பயன்பாட்டை உயர்த்திட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்துத் துறைகளின் அமைச்சர்களும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி மற்ற துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகம் உள்ள 14 மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி ஊரடங்கைக் கண்காணித்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்களை மாவட்ட வாரியாக நியமித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.