தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் ஏற்கனவே இரவு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதையொட்டி, தமிழகம் முழுவதும் 80,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 7,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கின் போது அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், திருமணங்கள், இறப்புக்கு செல்பவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அனுமதிப் பெற்ற கடிதங்கள் (அல்லது) அழைப்பிதழ்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
முழு ஊரடங்கில் எவைகளுக்கு அனுமதி!
முழு ஊரடங்கின் போது பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி மற்றும் அனைத்து சரக்கு வாகனங்கள், விளைப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 06.00- 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00- 03.00 மணி வரையிலும் மாலை 06.00- இரவு 09.00 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பாரிமுனை தேவராஜ முதலி தெரு, ராசப்பா செட்டி தெரு ஆகிய இடங்களில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. மேலும், சென்னையில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்கள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஸ்விக்கி, சோமோட்டோ போன்ற ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு உணவகங்கள் செயல்படும் நேரத்தில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடையின்றி செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்- கர்நாடகா எல்லையான ஓசூர் ஜூஜூ வாடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முறையான இ- பதிவு பெற்று பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.