தென்காசி புதிய மாவட்டம் செயல்படத் துவங்கிய பிறகு கடந்த வாரம் முதன்முதலாக 25- ஆம் தேதி குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, பாசன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது குறை தீர்க்கும் கூட்டம் நேற்று (02.12.2019) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை முதலே ஏராளமானோர் மனுக்களுடன் திரண்டு வந்தனர். போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்தி மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். மண்டபத்தில் அமர்ந்திருந்த வருவாய் துறை பணியாளர்களும் மனுக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென தமிழகத்தில் ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், குறைதீர் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து கலெக்டர், அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதலில் அதிகாரிகளை வைத்து மனுக்களை பெற்றுக் கொள்வது என ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த முடிவை கைவிட்டு மனு கொடுக்க வந்தவர்கள் வரிசையில் நின்று பெட்டியில் மனுக்களை சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனையடுத்து குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு மனுக்களை புகார் பெட்டியில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் இரண்டாது கூட்டமே ரத்தானதால் மனு பொடுக்க வந்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்க வந்தவர்கள், ஏமாற்றம் அடைந்தனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் யாரிடம் மனு அளிப்பது என்று தெரியாமல் நின்றனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் வைக்கப்பட்ட பெட்டியில் தங்கள் மனுக்களைப் போட்டுச் சென்றனர்.