உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.
மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று பலரும் தாமாக முன்வந்து நிதி வழங்கினர். தற்போது கரோனா தடுப்புக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.36.34 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.