சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு நான்கு தீட்சிதர்களின் குடும்பங்களின் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமூக நலத்துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குழந்தை திருமணம் செய்யப்பட்டதற்காக அரசின் விதிகளுக்குட்பட்டு சோதனைகள் நடைபெற்றன.
இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தமிழக ஆளுநர் ரவிக்கு புகாரளித்தனர். அதில் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும் அவர்களுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் சோதனை நடைபெற்றதாக புகாரில் தெரிவித்திருந்தனர்.
அதன் பேரில் ஆளுநர் ரவி ஊடகத்திற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும் அவர்களுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாகவும், இது சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு எடுத்துக்காட்டு எனவும் பேட்டியளித்திருந்தார். இதனையொட்டி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இருவிரல் சோதனை நடைபெறவில்லை என ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொள்ள சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர். இவர்கள் நடராஜர் கோவில் உள்ளே சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் குழந்தை மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் அப்போது பரிசோதனை செய்ததாக கூறப்படும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நடராஜர் கோவில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பிரைவேட் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும் கட்டாயத்தின் பெயரில் தீட்சிதர்களின் குழந்தைகள் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் குழந்தை திருமணம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடத்தி வருகிறார்கள் என்று கூறுபவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை 2 நாட்களுக்குள் ஆணையத்தில் சமர்ப்பிப்போம்'' என்று கூறினார்.
தமிழக ஆளுநர் இரு விரல் சோதனை நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் விசாரணையில் இருவிரல் சோதனை இல்லை என தெளிவாகிறது. எனவே ஆளுநர் சரியான புரிதல் இல்லாமல் பேசி உள்ளதாக அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பேசப்படுகிறது.