Skip to main content

“அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்" - ராமதாஸ் அறிக்கை!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

pic 1_2.jpg

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது அரசு ஊழியர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும், பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் மீண்டும் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

 

அந்த அறிக்கையில் அவர் தெரிவிப்பதாவது, “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பழைய ஓய்வூதியத்  திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாதது அவர்களிடையே பெரும் மனக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல.

 

தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மறுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; பல்வேறு நிலைகளில் நிலவும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பனதான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவாகும். இந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசும் இக்கோரிக்கைகள் நியாயமற்றவை என்று கூறவில்லை. அதேநேரத்தில் நிதி நெருக்கடி என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுப்பது நியாயம் அல்ல.

 

தமிழக அரசைப் போலவே மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை வழங்கப்படாத மூன்று தவணைகளுக்கும் சேர்த்து 11% உயர்வு வழங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி மேலும் 3% உயர்த்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசைப் போலவே இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 17 விழுக்காட்டிலிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் 11.25 விழுக்காட்டிலிருந்து 21.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாநிலங்கள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியை சமாளித்து அகவிலைப் படியை உயர்த்தியுள்ள நிலையில், தமிழக அரசும் நிலைமையை சமாளித்து அகவிலைப் படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

pic 2_2.jpg

 

மற்றொருபுறம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்;  தங்களது பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் நிலையில், ஊதியமும் அவர்களுக்கு இணையாக வழங்கப்படுவதுதான் சரியானதாக இருக்கும்.

 

அரசு மருத்துவர்களின் இந்தக் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி மக்களைக் காப்பாற்றிய மருத்துவர்களின் உரிமைகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதுதான் மக்கள் நல அரசுக்கு அடையாளம் ஆகும். மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் கூடாது.

 

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10, 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியும் இக்கோரிக்கையை நிறைவேற்றும்படி குரல் கொடுத்துவருகிறது. முந்தைய ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கலந்தாய்வும் தொடங்கப்பட்டது. நீதிமன்றத் தடையால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றமே தடையை நீக்கிவிட்டபோதிலும், தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

 

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போதைய முதலமைச்சருக்கு உடன்பாடான ஒன்றுதான். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு எதுவும் மானியக் கோரிக்கையில் வெளியிடப்படாதது தமிழகம் எங்கும் உள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அசைக்க முடியாத அங்கமாக திகழும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம் ஆகும். இதை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.” இவ்வாறு ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

 

  

சார்ந்த செய்திகள்