திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பயனில்லாத திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு தற்போது தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள், நீர் உறிஞ்சுக் கிணறுகள் ஆகியவற்றை 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள உத்தரவில், செயல்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாவிட்டால் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக்கிணற்றை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றுவது தொடர்பான உதவிகளுக்கு 9445802145 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மகேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.