திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள கிராமம் பூவாளுர். அந்தப் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் தீபிகா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவந்த நிலையில், நேற்று (06.12.2021) வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருக்கும்போது தேங்கியிருந்த மழைநீரில் காலை வைத்துள்ளார். அப்போது எர்த் ஒயர் வழியாக அந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால், சிறுமி தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மரக்கட்டை உதவியுடன் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பரிவில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர் அவரை காப்பாற்றும் பொருட்டு, நெஞ்சை அழுத்தி அவருக்கு சுவாசம் கொடுக்க முற்பட்டனர். ஆனாலும் சிறுமியின் உடலில் எவ்வித சலனமும் இல்லை. இதனை அடுத்து அவருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க முடிவுசெய்து, டெஃபிரிலேட்டர் உதவியுடன் ஷாக் கொடுக்கப்பட்டது. மூன்றுமுறை ஷாக் கொடுக்கப்பட்டும் சிறுமியின் உடலில் எந்த அசைவும் ஏற்படாமல் போகவே மருத்துவ குழுவினர் நம்பிக்கை இழந்தனர். இருந்தும் மருத்துவர் சரவணன் நம்பிக்கை இழக்காமல் 4, 5 முறை அவருக்கு ஷாக் தரவே, எதிர்பாராத வகையில் சிறுமி நீண்ட மூச்சு விட்டாள். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்ற மருத்துவர்கள் அவருக்குத் தேவையான ஆக்ஸிஜன் கொடுத்து அவரை சீராக்கினர். பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.