
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் ஆய்வாளர் குமாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முனுசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வெள்ளியங்காடு பூமாதேவி நகர் பேருந்து நிலையம் அருகே போதையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து காரமடை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். போலீசார் விசாரித்த போது, ‘அவர்கள் கஞ்சா அடித்திருந்ததும், அவர்கள் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் பாபு (வயது 19) மற்றும் மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் (வயது 21) என்பதும் தெரிய வந்தது.
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில், இந்த இளைஞர்கள் ஈடுபட்டு வந்ததும்’ தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த 1,100 கிலோ கஞ்சாவினையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகள் கஞ்சா விற்பனை மையங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன என வேதனையாய் சொல்கிறார்கள் காவல் துறையினர்.