தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரணம் வழங்குவது தொடர்பாகத் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
அதில் "எந்த ஒரு அமைப்பும் நிவாரணத்தை முறையாக வழங்க மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். நிவாரண உதவிகளைச் செய்யச் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம். அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியர்களின் அனுமதியுடன் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் ஈடுபடலாம். அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல. நோய்த் தொற்று சூழலைக் கருதி பாதுகாப்பாக நிவாரணம் தர வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்குவது குறித்த அம்சங்கள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சூழலுக்கு ஏற்றார் போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத்தான் கேட்டுக்கொண்டோம். தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரணம் வழங்குவதில் எந்த அரசியலும் செய்யவில்லை. மக்களுக்குப் பாதுகாப்பாக நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தியதே தவிர தடை விதிக்கவில்லை. மு.க.ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி போன்ற தலைவர்கள் உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்கின்றனர். நோய்த் தொற்றை தடுக்கும் உண்மையான நோக்கத்தைப் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும்." இவ்வாறு அரசு விளக்கமளித்துள்ளது.