மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7.5% இடஒதுக்கீட்டிற்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதம் ஏற்பட்டதால், நேற்று தமிழக அரசு அதிரடியாக இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை வெளியிட்டது. இந்த நிலையில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தைக் கேட்டறிந்து மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் செப்டம்பர் 26- ஆம் தேதி எழுதிய கடிதத்துக்கு நேற்றுதான் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் கடிதம் அனுப்பினார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளதால், விரைவில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்க வாய்ப்புள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததால். அரசுப் பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.