கட்சியைப் பார்த்து தள்ளுபடி செய்யவில்லை; விவசாயிகளின் கஷ்டத்தைப் பார்த்து கடனை தள்ளுபடி செய்தோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது பேசிய முதல்வர், "விவசாயிகள் கோரிக்கையின் படி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்சியைப் பார்த்து தள்ளுபடி செய்யவில்லை; விவசாயிகளின் கஷ்டத்தைப் பார்த்து கடனை தள்ளுபடி செய்தோம். கட்சிச் சார்ந்து யாருக்கும் கடன் கொடுப்பதில்லை; விவசாயிகள் யாராக இருந்தாலும் பயிர்க்கடன் வழங்கப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தந்த ஒரே அரசு அ.தி.மு.க. ஆட்சிதான். விவசாயிகளை, ரவுடியுடன் ஒப்பிட்டுப் பேசுவது எந்த விதத்தில் சரி என்பதை ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும். நான் விவசாயி, விவசாயி என்று சொன்னால் ஸ்டாலின் கோபப்படுகிறார். விவசாயிகளுக்கு இன்னல் ஏற்படும் போது தானாக வந்து அ.தி.மு.க. அரசு சரிசெய்து விடும். பொன்னேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்" என்றார்.