உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது. வரும் 31ம் தேதியோடு தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைவதால் மாவட்ட ஆட்சியர்களோடு முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி, ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் பொதுபோக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டதுபோல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.