முதல்வரைத் தொடர்ந்து தமிழக தலைமை செயலாளருடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை செய்து வருகிறார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும், சட்டப்பேரவையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை செய்தனர்.. அதில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உள்துறை செயலாளர் பிரபாகர், உளவுத்துறை செயலாளர் ஐஜி சத்தியமூர்த்தியும் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க ஆறு ஐபிஎஸ் அதிகாரிகளை டிஜிபி நியமித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.