டெல்லியில் பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/06/2021) மாலை 05.00 மணிக்கு சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் கோரிக்கை அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ள கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கமளித்தார்.
அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "தமிழகத்திற்கு கூடுதலாகத் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன். செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி மையங்களில் உற்பத்தியைத் தொடங்க கோரிக்கை வைத்துள்ளேன். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்துச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்திள்ளேன்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். மேகதாது அணை கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்திற்கான நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு விடுவிக்கவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை, காவிரி பிரச்சனை, கச்சத்தீவு மீட்பு தொடர்பாகவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மின்சாரத் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டின் அளவுகோலை மாநிலங்களே நிர்ணயிக்க அதிகாரம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு தேவை என்று வலியுறுத்தியுள்ளேன். கோதாவரி- காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்ற போக்கைப் பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். கரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சியானதாகவும், மனநிறைவாகவும் இருந்தது. எந்த கோரிக்கைகள் தொடர்பாகவும், எந்த நேரத்திலும் தன்னைத் தொடர்புக் கொள்ளலாம் என பிரதமர் கூறினார்". இவ்வாறு தமிழக முதலமைச்சர் கூறினார்.