தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், அவ்வப்போது வாகன சோதனை செய்துவரும் பறக்கும் படையினர், கணக்கில் வராத பணம், உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்படும் பொருட்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, சி.ஆர்.பி.எஃப் காவல்துறை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பணப்பட்டுவாடாவைத் தவிர்ப்பது, சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, விதிமீறல்களைக் கண்காணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.