தமிழகத்தில் ரூபாய் 52,257 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (29/01/2021) மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட், 7 பேர் விடுதலை விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் 34 திட்டங்களில் ரூபாய் 52,257 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையான 'தமிழ்நாடு தொழில் கொள்கை 2021' வெளியிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 93,935 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மின்னணுவியல், மின் வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனத் துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் ரூபாய் 5,763 கோடியும், சன் எடிசன் நிறுவனம் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதி உற்பத்தித் திட்டத்திற்கு ரூபாய் 4,629 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்தில் லித்தியம் அயன் மின்னேற்றுகள் உற்பத்திக்கு லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூபாய் 2,500 கோடியும் முதலீடு செய்துள்ளனர். மேலும், பர்கூரில் மின் வாகனங்கள் உற்பத்தித் திட்டத்திற்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ரூபாய் 2,354 கோடியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செல்ஃபோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு பெகாட்ரான் நிறுவனம் ரூபாய் 1,100 கோடியும் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.