2020- 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (14/02/2020) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினர்.
நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 4.56 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவித்த ஓபிஎஸ், நீரை சிக்கனமாக பயன்படுத்தி திருத்திய நெல் சாகுபடி முறைக்கு 27.18 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்படும். தமிழக பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 11.1 லட்சம் ஏக்கர் நெல் விதைப்பு முறை நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கைக்கு விரிவுபடுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உரையில் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் வளங்களை வாரிச் சுருட்டி செல்வது போல் உள்ளது பட்ஜெட். திமுக மற்றும் அதிமுக அரசு கடைப்பிடித்த நிதி நிர்வாகத்தால் ஒவ்வொருவரின் தலை மீதும் ரூபாய் 57,500 கடன் நிற்கிறது. தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றிய ஒன்றுதான் இந்த இரு அரசுகளின் சாதனை. நிதி ஆதாரத்தை பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது அதிமுக அரசு" என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.