தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மின்னணு பரிவர்த்தனை காசோலை, வங்கி வரைவோலை மூலமாக நன்கொடை வழங்கலாம் என அறிவித்திருந்த நிலையில், பிரபலங்கள், நடிகர்கள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் முதல்வரின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். திரைப் பிரபலங்கள், நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார் உள்ளிட்டோரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவி செய்தனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து கரோனா நிவாரணப் பணிகளுக்காக பில்ரோத் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் கல்பனா ராஜேஷ் பில்ரோத் மருத்துவமனை சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.