தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.
ஜனவரி 6- ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நான்கு நாட்கள் நடைபெற்றது.
கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (09.01.2020) மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை 6 மாதம் நீட்டிப்பதற்கான மசோதாவும் பேரவையில் நிறைவேறியது. இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்படுகிறது.
பேரவையில் எஸ்சி, எஸ்டி, எம்எல்ஏக்களுக்கு 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு நீட்டிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றியது. இதனிடையே பேரவையில் ஆங்கிலோ இந்தியன் நியமன உறுப்பினர் பிரதிநிதித்துவம் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.