தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பணப்பட்டுவாடா செய்திருக்கிறது. எனவே, வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (30/04/2021) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணப்பட்டுவாடா தொடர்பாக விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். தற்போதைய நிலையில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இதுபோன்ற அற்ப காரணங்களுக்காக வழக்கு தொடரக்கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளீர்கள், அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2ஆம் தேதி அன்று எண்ண தடை இல்லை” எனக் கூறிய நீதிபதிகள், கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.