சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (19/03/2021) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைந்தது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 5,000- க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதில், 4,200-க்கும் மேற்பட்டோர் ஆண்கள் என்பதும், 750- க்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் மயிலாப்பூர், மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இரண்டு திருநங்கைகளும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட 75 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் சுயேச்சையாகப் போட்டியிட 59 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் இன்று (19/03/2021) மாலை 06.00 மணிக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தவர்களின் முழு விவரம் வெளியாகும் என்று தகவல் கூறுகின்றனர்.
வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நாளை (20/03/2021) வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு மார்ச் 22- ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து, அன்று பிற்பகலே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.