தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். அதேபோல், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஏற்கனவே தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் மாவட்டந்தோறும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் மதுரையில் தொடங்கினார். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் இன்று (20/12/2020) மாலை ஆலந்தூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் கமல்ஹாசன், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.