தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பேரூர் ஆதீனத்திற்கு செல்லும் பொழுது என்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தேன். ஆதீனங்கள் இல்லாமல் தமிழ் வளர்ச்சி கிடையாது. ஆதினங்களை விடுவித்து தமிழ் வளர்ச்சியைப் பற்றி பேச முடியாது. அதனால்தான் சொன்னேன் காவி தமிழாகத்தான் தமிழ் முதலில் வளர்ந்தது. கருப்பு தமிழாக தமிழ் வளரவில்லை.
அந்த காவி தமிழைப் போற்றும் பொழுது காவியை சேர்த்துத்தான் போற்றவேண்டும். நான் ஆதீன காவியை சொன்னேன். இன்றுகூட அதைதான் முன்மொழிகிறேன். ஐநூறு ஆண்டு காலமாக தருமபுரி ஆதீனத்தில் நடந்து கொண்டிருக்கின்ற இந்த பட்டினப்பிரவேசம் நிச்சயமாக நடக்க வேண்டும். அதற்காக முதல்வரும் ஆதீனமும் இணைந்து உட்கார்ந்து பேசி அதற்கு ஒரு நல்ல தீர்வை கொண்டு வரவேண்டும். அவர்கள் யாருமே ஆதீனத்தை சுமப்பதற்கு திணிக்கப்படவில்லை. விருப்பமிட்டு சீடர்கள் அதை செய்கிறேன் என்று சொல்கிறார்கள். அதனால் எல்லோரும் அவர் அவர்களின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பது எனது கருத்து'' என்றார்.