தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வருக்கு திருச்சி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக காவல்துறை சார்பில் முதல்வருக்கு மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் கார் மூலம் தஞ்சை புறப்பட்டு சென்றார். தஞ்சை கல்குளத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைவையொட்டி அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் தஞ்சை சுற்றுலா மாளிகையில் மதிய உணவிற்கு பிறகு ஓய்வு எடுத்துக் கொண்டார். பிறகு திருவாரூர் சென்று இரவு தங்க உள்ளார். நாளை காலை மன்னார்குடி மலர் மஹாலில் நடைபெறும் திமுக நிர்வாகி இல்ல திருமணத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் மதியம் 1.45 மணி அளவில் திருவாரூரில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தடைகிறார். பின்னர் 3.45 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் புறப்படுவதற்கு முன்னதாக திருச்சி, கே கே நகர், தென்றல் நகர் திமுக அவைத் தலைவரும், ஓய்வு பெற்ற முன்னாள் தமிழாசிரியருமான முனைவர் சுப்ரமணியன் தனது மனைவியுடன் வந்து ஸ்டாலினிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கேகே நகர் என்பதை கலைஞர் நகர் என முழுமையாக குறிப்பிட வேண்டும். கே.கே. நகர் முதியோர்கள் அதிகம் வசிப்பதால் அப்பகுதியில் உடனடியாக மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.