தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் கூடியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். ஐடி கார்டு பெற்ற கரோனா இல்லாத எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவர் உரையாவது, ''தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் - பெண் சமத்துவம். அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அரசின் ஒவ்வொரு செயலும் சட்டமும் திட்டமும் முயற்சியும் இந்த கொள்கைகளைக் கொண்டிருக்கும். தனக்கு வாக்களித்தோர் என்றும் வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக பயன்படுத்த அரசியல் சட்டத்தில் 343வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசுக்குத் தேவைப்படும் பல்வேறு கோரிக்கைகளைப் பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டின் நிதி நிலையைக் குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் மீதான புகார்களை விசாரிக்கும் லோக்ஆயுக்தா அமைப்பிற்கு உரிய அதிகாரம் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு விழிப்புப் பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் விசாரிக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவை கொண்டுவந்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவோம். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையைப் பெற்று சட்ட முன்வடிவுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு முறையாக இருப்பதை உறுதிசெய்த பின்னர் தேர்தல் நடத்தப்படும். கரோனா தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும். பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'' என்றார்.