கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (03/03/2022) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தமிழகத்தின் வறட்சிக்கு இலக்காகும் மதுரை. திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடிநீர், நீர்பாசனம் போன்ற வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்ய முல்லைப் பெரியாறு அணை மிகவும் இன்றியமையாததாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் கிடைக்கப் பெற வேண்டும் என்பது அம்மாவட்டங்களின் விவசாயிகளுக்கு மிகவும் உணர்வு பூர்வமானதாக உள்ளது. இரு மாநில மக்களின் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு, முல்லை பெரியாறு அணையை மிகுந்த கவனத்துடன் தமிழக அரசு பராமரித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் 27/02/2006 மற்றும் 07/05/2014 நாளிட்ட ஆணைகளை நிறைவேற்றவும், மத்திய நீர்வளக் குழுமத்தின் வழிகாட்டுதலின்படியும், முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்குத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை அணைப் பகுதிக்கு கொண்டுச் செல்ல தேவையான அனுமதி வழங்குவதை கேரள அரசின் வனத்துறை மற்றும் நீர்வளத் துறை தாமதப்படுத்தி வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
உச்சநீதிமன்ற ஆணையின்படி முல்லைப் பெரியாறு அணையின் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதால், கேரளா அரசின் அரசாணை நிலை எண் 23/2021. வனம் மற்றும் வன உயிரினத் துறை, நாள் 11/11/2021 மூலம் மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை ரத்து செய்து வெளியிட்ட ஆணைகளைத் திரும்பப் பெறவும், மேற்படி 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய நீர்வள குழுமத்தால் பரிந்துரைக்கப்பட்டவாறு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளை அமைக்க வேண்டும் என கேரள மாநில அரசு தொடர்ந்து கேட்டுவருவதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஐதராபாத்திலுள்ள புவி இயற்பியல் ஆய்வு நிறுவனம் மூலம் மேற்படி கருவிகளை அணைப் பகுதியில் அமைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் அக்கருவிகள் நிறுவுவதற்கு ஆயத்தமாக உள்ளன. இருந்தபோதிலும், நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளைப் பொருத்துவதற்கு தேவையான மேடை மற்றும் தூண்கள் அமைக்கப் பயன்படுத்தப்படவுள்ள கட்டுமான பொருட்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதிக்கவில்லை என எனது அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சனையில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, தேவையான கட்டுமான பொருட்களை வல்லக்கடவு வனச்சாலை வழியாக முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு கொண்டு செல்லவும், அவ்வனச்சாலையை சீரமைக்கவும்.15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் தேவையான ஒப்புதலை வழங்கிட தொடர்புடைய தங்கள் மாநில அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், உச்சநீதிமன்ற ஆணையை நாம் விரைந்து நிறைவேற்றும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதிய நேர்முக கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.