திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே இருக்கும் கலிக்க நாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் இவர் கீரனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திராமணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதிகளின் மூத்த மகள் திவ்யா என்பவர் இந்திய வனப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதுபோல் இந்திய அளவில் பத்தாம் இடம் பிடித்துள்ளார்.
இவர்களது பெற்றோர்கள் இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தங்களது மகள் திவ்யாவுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் தேர்வில் வெற்றி பெற்ற திவ்யா பி.இ. எலக்ட்ரிக் & எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் படித்துள்ளார். மேலும் இந்த மாணவி மூன்று ஆண்டுகளாக படித்து முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுசம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் திவ்யா பேசும் போது, “தொடர்ச்சியாக இந்த பணியில் உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்ற உள்ளதாகவும் இந்த யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இனி எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் வெற்றி பெற்று பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று கூறினார்.