
தொடரந்து அவதூறாக பேசிவரும் எச்.ராஜாவை தண்டிக்க வேண்டிய தமிழக அரசும் அவருக்கு அடிமையாக இருப்பது வேதனையளிக்கிறது என திருவாருரில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
திருவாரூரில் தமிழக அரசின் ஊழலுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை. வரும் வழியெங்கும் பயிர்கள் கருகிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. இதற்கு முழுகாரணம் தமிழக அரசின் ஊழல்தான் என்பதனை இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெளிவாக அனைவரும் தொிவித்தனர். இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் என்பது முதற்கட்டம்தான் இனி அரசை எதிர்த்து போராட்டங்கள் தொடரும்.
பாஜக எச்.ராஜா எந்த தைரியத்தில் அவதூறாக பேசுகிறார் என்பது தொியவில்லை ஆனால் ஒன்றும் மட்டும் தொிகிறது அவர் சட்டத்தை அவமதித்து பேசுகிறார். இந்துதுவத்தை பேசுகிறார் தமிழ்நாட்டில் 80 சதவிகிதம் போ் இந்துக்கள் ஆனால் நாகரிமான இந்துக்கள். காட்டுமிராண்டி இந்துக்களுக்கு சட்டம் தொியாமல் போகலாம் நாகரிக இந்துக்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இதனால் தான் இவர்களை தமிழ்நாட்டு மக்கள் சோ்க்க மறுக்கிறார்கள் என்பதை எச்.ராஜா புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களை போன்றவர்கள் சிலர் இருப்பதால் தான் பாஜக மோசமான நிலையில் உள்ளது. இத்தகைய பேச்சுகளை பேசி பதவி பெற முயற்சிக்கிறார் என தோன்றுகிறது. ஆனால் இது மாதிரியான பேச்சுகளை தடுத்து அவருக்கு தண்டனை பெற்று தரவேண்டிய தமிழக அரசு அவருக்கும் அடிமையாக இருப்பது தான் வேதனையாக உள்ளது." என்றார்.