Skip to main content

'அப்பனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்தவர் முருகன்'-அமைச்சர் சக்கரபாணி பேச்சு

Published on 26/08/2024 | Edited on 26/08/2024
 'Tamil Nadu is the state with the most spiritual temples in India' - Minister Chakrapani's speech

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு இரண்டாம் நாளான நேற்றும் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் மாநாட்டின் மலரினை நீதியரசர் சுரேஷ்குமார் வெளியிட்டார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பழனி சட்டமன்ற உறுப்பினர் பி.செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், 'தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடு, நிலங்கள் மீட்பு, கோயில் குடமுழுக்கு பணிகள், நடந்து கொண்டிருக்கும் பணிகள் போன்றவை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பட்டியலிட்டு கூறினார். கூறியதுபோல் அவரின் ஆணையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வீட்டில் இருக்கிறாரோ இல்லையோ கோயிலில் குடியிருக்கிறார்.  நாங்கள் எப்போது அழைத்தாலும் கோயில் குடமுழுக்கு போன்ற பணிகளில் இருப்பார். இந்தியாவிலேயே அதிகமாக ஆன்மிக கோயில்கள் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடுதான். பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக இங்கு உள்ளன. அவை அனைத்தையும்  புனரமைக்க வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டிருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியற்கு திண்டுக்கல் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர் ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர்.  அதேபோல், முதல் முறையாக பழனியில்  நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்திருக்கிறார். அறுபடை வீடுகள் இருந்தாலும் 3ஆம் படை வீடான பழனியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது ரோப் கார் அமைக்கும் திட்டம், பழனிக்கு தனியாக குடிநீர் வசதி, சித்த மருத்துவ கல்லூரி, கோவிலுக்கு உட்பட்ட  பெண்கள் கல்லூரி ஒட்டன்சத்திரத்தில் தொடக்கம், பெருந்திட்ட வளாகம் என பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டின் நோக்கம், முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பி முருகன் அடியார்களை ஒன்றிணைப்பது, முருகன் புகழ் பாடும் புராணங்கள், திருப்புகழ், இலக்கியங்கள் போன்றவற்றை உலகம் அறிய செய்தல், முருக வழிபாட்டின் உள்ளார்ந்த நெறிமுறைகளை உலகெங்கிலும் பரப்புதல், முருகனை அடையும் தத்துவக் கோட்பாடுகளை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக எடுத்துரைத்தல், இளைஞர்கள், முருக கோட்பாடுகளை மனதில் நிறுத்திட வேண்டும் உலகெங்கும் வலுப்படுத்த வேண்டும் என்பதுதான்.  

தொல்காப்பியம் போன்ற தொன்மையான சங்க இலக்கியங்களில் கூட  முருக வழிபாடு குறித்த சான்றுகள் இருக்கின்றன. முருகன் என்றால் மாறாத  இளமை உடையவன் என்று பொருள். முருகன் வழிபாடு குறித்த செய்திகளை பல இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. அகத்திய மாமுனிக்கு தமிழை கற்றுக் கொடுத்தவர், அப்பனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்தவர் முருகன். அறுபடை வீடுகளில் முருகன் இருந்தாலும் பழனிக்கு தனி சிறப்பு உண்டு. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில்  பல லட்சம் பக்தர்கள் நடந்தே வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசும், அறநிலைத்துறையும் செய்து கொடுக்கிறது.  இன்னும் பாதயாத்திரையாக வருவோருக்கு இளைப்பாறும் மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  

இந்த மாநாடு வெற்றி  மாநாடாக அமைந்திருக்கிறது. மாநாட்டில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் என ஒவ்வொன்றும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கண்காட்சி மாநாடு முடிவடைந்த பின்னரும் பொதுமக்கள் பார்வைக்காக 5 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்