நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழகமும் பங்கெடுத்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், "தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார்." அதேபோல் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே கோரிய 3,000 கோடி ரூபாயை விடுவிக்கவேண்டும் என வலியுறுத்தினார். 3,000 கோடியை மத்திய அரசு வழங்கினால் தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்" என்றார்.
மேலும், தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்காக நாளொன்றுக்கு 6.8 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் பேசிய முதல்வர், "7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த மசோதா, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது" எனவும் கூறினார்.
அதேபோல், "தமிழகத்திற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 1,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். இ-சஞ்சீவனி திட்டத்தை தமிழகம் சிறப்பாகக் கொண்டு சென்றிருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உதவும். நெல் கொள்முதல் மானியமாக நிலுவையில் உள்ள 1,320 கோடி மத்திய அரசு விடுவிக்க வேண்டுமெனவும்" கோரிக்கை வைத்தார்.