இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க இருக்கிறது. காலை 11 மணியளவில் துவங்கும் கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை வாசிப்பார். அதில் மக்கள் நலத் திட்டங்களின் நிலை, அதை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கை மற்றும் திட்டங்களைப் பற்றி ஆளுநர் உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் உரையுடன் இன்றைய பேரவை நிறைவடையும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல் முறையாகக் காகிதம் இல்லாத உரையாக ஆளுநர் உரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தகத்துக்குப் பதிலாகக் கணினித் திரையில் வரும் ஆங்கில உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகமா? தமிழ்நாடா? என்ற சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இன்று நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.