மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்கியது. தற்பொழுது ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்பொழுது விழாவானது நாட்டுப் பண் உடன் தொடங்கியது.
விழாவில் 'குட் ஈவினிங்' சென்னை.. வணக்கம், நமஸ்தே, எனக்கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, 'செஸ் போட்டிகளில் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் செஸ் தோன்றிய தாயகமான இந்தியாவில் நடக்கிறது. சதுரங்க விளையாட்டு தோன்றிய இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமைக்குரிய தருணம் ஆகும். மிகக் குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்திருக்கிறோம்' என்றார்.
தொடர்ந்து 'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்ற குறளை குறிப்பிட்டுப் பேசிய மோடி 'கடந்த 30 ஆண்டுகளில் ஆசிய நாடுகளிலேயே இல்லாத அளவிற்கு ஒலிம்பியாட் இந்தியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இம்முறை அதிக நாடுகள் பங்கேற்றுள்ளன. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக வீராங்கனைகள்,வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக இடங்களுக்கு ஒலிம்பிக் ஜோதி பயணம் ஆனது இந்த முறை தான். தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்பதை தொற்று காலம் எனக்கு உணர்த்தியது' என்றார்.