தமிழ்நாடு ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் (09.01.2023) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறியதும் சர்ச்சையானது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மேல சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் தமிழ்நாடு ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனால் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழ்நாடு ஆளுநரின் உருவ பொம்மையை எரிப்பதற்காகக் கொண்டு வந்த தந்தை பெரியார் திராவிட கழக தொண்டர்களிடமிருந்து காவல்துறையினர் உருவ பொம்மையை கைப்பற்றியதோடு, அவர்கள் கொண்டு வந்த பேனர்களையும் கைப்பற்றினர். மேலும் போராட்டத்தில் ஈடுபடாதவாறு போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆளுநரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.