தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். டி.என்.பி.எஸ்.சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கு கடந்த ஓராண்டாக யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் அறிவிப்புகள் வெளியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் பின்னர், சில நாட்களுக்கு முன்பு, தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவையும், 10 உறுப்பினர்கள் பதவிக்களுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பியது. ஆனால், இதற்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்து கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டார்.
மேலும், ஆளுநர் மாளிகையில் இருந்து டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு செய்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது?அதே போல், உறுப்பினர்கள் தேர்வில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பது போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் கேட்டிருந்த கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பாக முறையான விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்றும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.