Skip to main content

“மூன்று கோரிக்கைகளில் தமிழக அரசு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” - காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

Tamil Nadu government should take immediate action on three demands- Cauvery Rights Redemption Committee demand

 

மேகதாட்டில் அணை கட்டுவதை ஆய்வுசெய்ய தமிழக அரசு மற்றும் வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.  நடுவண் அரசின் சூழலியல் துறை, வனத்துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெறாமல், சட்ட விரோதமாக மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் பணிகளைக் கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாகச் செய்தி ஊடகம் ஒன்றில் வந்த செய்தியை அடிப்படைத் தகவலாய்க் கொண்டு, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத் தென் மண்டலப் பிரிவு, தானே முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரணைக் குழு அமைத்துள்ளது.

 

தமிழ்நாடு அரசு உளவுத்துறை, பொதுப்பணித்துறை, இப்பொழுது நீர்வளத்துறை – ஆகிய எதுவும் கர்நாடக அரசின் மேற்கண்ட சட்டவிரோத அணைகட்டும் பணிகளைக் கண்டறியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மிகை வெள்ளக் காலத்தில் கர்நாடக அணைகளில் தேக்க முடியாத காவிரி நீரையும் தேக்கி, மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு மிகை நீர் கூடப் போகாமல் தடுக்க வேண்டும் என்ற சதி நோக்குடன்தான் கர்நாடகம் அந்த அணையைக் கட்ட முயல்கிறது. காவிரி உரிமை மீட்புக் குழுவில் உள்ள அமைப்புகள், மேகதாட்டு அணைத் திட்டம், உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்புக்கு (16.02.2018) எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளன. மேகதாட்டு கட்டுமானப் பணிகளைத் தடுப்பதற்காக தேன்கனிக்கோட்டையிலிருந்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 5,000 பேர் நடைபயணம் புறப்பட்டு (07.03.2015) அன்று கைதானோம்.

 

மேகதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் சட்டவிரோத முயற்சிக்குத் தடை கோரித் தமிழ்நாடு அரசு கடந்த 2018 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கிடப்பில் போட்டுவிட்டது. தமிழ்நாடு அரசும் அவ்வழக்கை உயிர்ப்பித்து, விரைந்து நடத்த உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இப்போது, ஏதோ ஓர் செய்தி ஊடகத்தில் மேகதாட்டு அணை கட்டும் பணிகள் நடப்பதாக செய்தி வர, அது நம்பகமான செய்தியாகத் தெரிவதால், வனப்பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு கருதி, தானே முன்வந்து வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தீர்ப்பாய நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, வல்லுநர் குழு அமைத்து, மேகதாட்டில் அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகள் நடந்துள்ளனவா என்று கண்டறிந்து அறிக்கை தர கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

 

அத்துடன், உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேகதாட்டு அணை தடுப்புக்கான வழக்கை உயிர்ப்பித்து, உடனடியாக விசாரணை நடக்கத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாட்டு அணை கட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கை அனுப்புமாறு கர்நாடக அரசைக் கோரி இந்திய அரசின் நீர்வளத்துறை கொடுத்த மறைமுக அனுமதியை திரும்பப் பெறுமாறு தலைமையமைச்சர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மேற்கண்ட மூன்று கோரிக்கைகள் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி, போர்க்கால அவசரத்துடன் நடவடிக்கை எடுக்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்