Skip to main content

கலவரத்தை தூண்டுகின்ற வகையில் பேசியிருக்கின்ற கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈஸ்வரன்

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
es

 

’சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேசிய பேச்சுக்கள் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது’ என்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் 


ஒரு சட்டமன்ற உறுப்பினர் சாதி பெயரை குறிப்பிட்டு  பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீங்கள் பிறந்த சாதியை உயர்வாக பேசிக்கொள்ளுங்கள் அதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. உங்களை உயர்த்தி கொள்வதற்காக அடுத்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான பாதைக்கு வழி காட்டுவதாகும். தமிழக அரசை பற்றி எந்த குற்றத்தை வேண்டுமானாலும் சுமத்தலாம், விமர்சனம் செய்யலாம். அந்த உரிமை ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அதிகமாகவே உள்ளது. 

 

karuu

 

முதலமைச்சருடைய சாதியை குறிப்பிட்டு அந்த சாதிக்கு முதலமைச்சர் பதவி என்பது இன்னொரு சாதி போட்ட பிச்சை என்று குறிப்பிட்டு பேசுவது வன்முறையை தூண்டக்கூடியது. இருக்கின்ற சாதி பிரச்சினைகள் போதாது, நீங்கள் வேறயா. நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் அண்ணா தி.மு.கவினுடைய வாக்குவங்கியால் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆனீர்களா அல்லது உங்கள் மக்கள் செல்வாக்கால் அண்ணா தி.மு.க ஆட்சிக்கு வந்ததா. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கொங்கு மண்டலத்தினுடைய ஆதரவால்தான் அண்ணா தி.மு.க ஆட்சிக்கு வந்து கொண்டிருந்ததென்பது எந்தவொரு பாமரனுக்கும் தெரியும். 2016 -ஆம் ஆண்டிலே ஆட்சிக்கு வந்தது கூட கொங்கு மண்டலம் கொடுத்த வெற்றிதான் என்பதை நினைவூட்டுகிறேன். அப்படி இருக்கையில் இன்னொரு சாதி போட்ட பிச்சையில் கொங்கு மண்டலத்துக்காரர் முதலமைச்சராகி இருக்கிறார் என்று சொல்வது நியாயமா ?. தனிப்பட்ட விளம்பரம் தேடி கொள்வதற்காக இப்படி பேசுவதை எல்லாம் தவிர்க்க வேண்டும். 

 

ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு முதல் தகுதி மற்றவர்கள் மனம் புண்படாமல் பேசுவதுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 2016 -யில் கடைசி நேரத்தில் உங்களை அழைத்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக்கினார்கள் என்பதற்காக நன்றி விசுவாசத்தை காட்டுங்கள், யாருக்கும் கவலையில்லை. ஆனால் அடுத்தவர்களை கேவலப்படுத்தி பேசாதீர்கள். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதை அனுமதிக்க கூடாது. எல்லோருக்கும் பேச தெரியும். ஆனால் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்ள கூடாது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் மதுபாட்டில் செலவுகளுக்காக தினசரி 1 லட்சம் செலவு செய்கிறேன் என்று சொல்வது எப்படிப்பட்ட முன் உதாரணமாக அமையும் என்று யோசிக்க வேண்டாமா. இதை போன்ற கலவரங்களை தூண்டுகின்ற பேச்சுகளும், மற்றவர்களை கொச்சைப்படுத்தி பேசுகின்ற பேச்சுகளும் அனுமதிக்கப்பட கூடாது. தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.’’


 

சார்ந்த செய்திகள்